சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /சமூக நல இயக்குனர்
மா.செள.சங்கீதா , மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சமூக நல இயக்குநர் மா.சௌ.சங்கீதா இன்றையதினம் (31.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தலைமையில், கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் புதிதாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த (15.07.2025) அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டமும், பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக் காக்கின்ற வகையில் கடந்த (02.08.2025) அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் திட்டமும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்று வரும் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மற்றும் வாரத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்று வரும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” ஆகிய திட்ட முகாம்களின் வாயிலாக பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
இம்முகாம்களில், ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் முகாம்களின் வாயிலாக துறைகள் வாரியாக பெறப்பட்டு வரும் மனுக்களின் வகைகள் குறித்தும், அம்மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதேபோன்று ”நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்களின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அதனை பெறுவதற்கான சான்றுகள் ஆகியவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியன குறித்தும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் ஆகியன குறித்து துறை ரீதியாக எடுத்துரைப்பதற்கு ஏதுவாக, அரசின் அனைத்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்களுடன் இக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.
மேலும், மேற்கண்ட முகாம்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் விளம்பர பணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை பெறுவதற்கு ஏதுவாக, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அந்தந்த துறைகளின் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் வகைகள், அதற்கான தீர்வுகள் ஆகியன குறித்து, அந்தந்த முகாம்களைச் சார்ந்த பொறுப்பு அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் எடுத்துரைக்கலாம். ஒவ்வொரு துறைகள் வாரியாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், அவைகள் சார்ந்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு, வருகின்ற (03.09.2025) அன்று மதிப்பிற்குரிய முதன்மை செயலர் அவர்களால் ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கான மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்
படவுள்ளது.
அரசின் திட்டப் பயன்களை தகுதியான எந்தவொரு பயனாளிகளும் விடுபடாமல் பெறுவதற்கு, அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய திட்டப் பயன்களை பொது மக்களுக்கு கிடைக்கப்பெற செய்தல் வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சமூக நல இயக்குனர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மற்றும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவைகளுக்கான பொறுப்பு அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் பெறப்பட்டுள்ள மனுக்களின் வகைகள் மற்றும் அம்மனுக்களில் தகுதியான பயனாளிகளுக்கு அம்முகாம்களிலேயே வழங்கப்பட்டுள்ள அரசின் திட்டப்பயன்கள் ஆகியன குறித்து, விரிவாக எடுத்துரைத்தனர்.
முகாம்களில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி அவர்களின் கோரிக்கைகளை வழங்குவதற்கான இடங்கள் குறித்து முறையாக தகவல் பலகைகள் நிறுவிடவும் மற்றும் அம்முகாம்களில் ஒலிப்பெருக்கியின் வாயிலாக பொதுமக்களுக்கான தகவல்களை முறையாக வழங்கியும், குறிப்பாக , முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மரு.ஜி. அரவிந்த் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன் உட்பட அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





