திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 18வார்டுகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 20000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. மீஞ்சூரில் குடியிருக்கும் மக்கள் சென்னைக்கும், சென்னையில் இருந்து மக்கள் மீஞ்சூருக்கும் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். வேலை நிமித்தமாக செல்வோர் நேரடி பேருந்து சேவை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீஞ்சூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வெளி வட்டச்சாலை, செங்குன்றம் வழியாக கோயம்பேடு வரையிலும், சென்னை வெளி வட்டச்சாலை வழியாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரையிலும் நேரடி மாநகர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, மீஞ்சூர் மக்களின் சார்பில் மீஞ்சூர் பேரூர் திமுக செயலாளர் க.சு.தமிழ்உதயன், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சா.சி சிவசங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனு பெற்று கொண்ட அமைச்சர் சிவசங்கர் அதிகரிடம் கலந்தாலோசித்து விரைவில் பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். உடன் தொ.மு.ச. நிர்வாகி செந்தமிழ் சசி, திமுக நிர்வாகிகள் முப்புராஜ், தமிழரசன், தங்கராஜ், சிலம்பரசன், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





