மதுரை: மதுரை மாவட்டம், செக்கானூரணியில் புதிதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிலையத்தில் 7 பேருந்து நிறுத்துமிடங்கள், 27 வணிகக் கடைகள், 2 உணவகங்கள், காத்திருப்பு அறைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள், காவல்துறை மற்றும் போக்குவரத்து அலுவலகங்கள், கழிப்பறைகள் மற்றும் 21 காய்கறிச் சந்தைக் கடைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கபாண்டியன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகளையும் விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்சார விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். வைகை அணையில் போதிய நீர்மட்டம் எட்டியதும் விவசாயத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





