மதுரை: மதுரை மாநகராட்சி அம்ரூத் திட்டத்தின் கீழ் வைகை வடகரை மற்றும் தென்கரை ஆகிய பகுதிகளில் உள்ள விடுபட்ட வார்டு பகுதிகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 2 க்கு உட்பட்ட மாட்டுத்தாவணி அருகில் உள்ள லேக் ஏரியா, அல்அமீன் நகர், சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர், பாண்டிகோவில் அருகில் உள்ள ஜே.ஜே.நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை பணிகளுக்காக கழிவுநீர் தொட்டிகள் கட்டுதல், கழிவுநீர் செல்லும் குழாய்கள் பதித்தல், கழிவுநீர் தொட்டியில் இணைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை ஆணையாளர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி பணியாளர்கள் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் , திருநகர் காந்திஜி தெரு பகுதியில் புதிய கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு காய்கறி மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும், காய்கறி கழிவுகளை அருகில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டுமாறு கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.
காய்கறி வளாக பகுதியினை சுத்தமாகவும், தூய்மையாகவும் தொடர்ந்து பராமரிக்குமாறும், கே.கே.நகர் சுந்தரம் பூங்கா மெயின் சாலையில் தேங்கியிருந்த மழைநீரினை அப்புறப்படுத்துமாறும், அப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை விரைந்து அகற்றுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளர் பாபு, செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், உதவி செயற் பொறியாளர்கள் காமராஜ், ஆரோக்கியசேவியர், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவி பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




