சென்னை: மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நடைபெறவுள்ள திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், மின்வசதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்களின் தேவைகளை முன்னுரிமையாகக் கொண்டு வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அரசு திட்டங்களின் பயன்கள் மக்களை தாமதமின்றி சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




