மதுரை: மதுரை மாநகராட்சி புதூர் சுகாதார பிரிவு அலுவலகம், லூர்து நகர் பகுதியில் குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்தும், புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம் நெல்பேட்டை உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.10 புதூர் பகுதியில் உள்ள சுகாதார பிரிவு வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேடு, பணியாளர்களின் எண்ணிக்கை, பராமரிக்கப்படும் அலுவலகத்தின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மண்டலம் 1 வார்டு எண்.10 கோ.புதூர், லூரர்து நகர் மற்றும் சூர்யா நகர் ஆகிய பகுதிகளில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் சுத்தமாக வழங்கப்படுகிறதா எனவும், தினந்தோறும் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிப்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மண்டலம் 1 கோ.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவுகள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வைக்கக்கூடிய இடங்களையும் மிகத்தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பணிபுரியும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அருகில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு தினசரி வரும் நோயாளிகள் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், குழந்தைகள் பிறப்பு, தாய்சேய் நலம், பொது மருத்துவம், மருந்துகள் இருப்பு. பணியாளர்கள் எண்ணிக்கை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மண்டலம் 4 நெல்பேட்டை பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுகள் வழங்குவதற்காக உணவுகள் தயாரிக்கப்படும் கூடத்தை பார்வையிட்டு உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம், உணவு தயாரிக்கும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பது, உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மைய பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, துணை ஆணையாளர் ராஜாராம், மாநகர்நல அலுவலர் மரு.அர்விந்த் ஜோதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், கல்வி அலுவலர் மோகன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




